ஸ்கேட்டிங்கில் இவன் படைத் திருக்கும் சாதனை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறது. துருவ் இந்த நிலையை எட்டுவதற்கு அவனுடைய பெற்றோர் சுபாஷ் யஷ்வந்த்ரவ் கம்தி - ஷில்பா இரு வரும் பக்கபலமாக இருந்திருக் கிறார்கள். சிறுவயதிலேயே மகனிடம் விளையாட்டு ஆர்வத்தை விதைத்து வளர்த் தெடுத்திருக்கிறார்கள். அதற்காக பல்வேறு சிரமங்களையும் எதிர்கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்காங்கட் மாவட்டத்தில் உள்ள கின்ஹலா கிராமத்தை சேர்ந்தவர்கள். சுபாஷ்தான் அந்த கிராமத்தின் முதல் பட்டதாரி. என்ஜினீயரிங் படித்து முடித்தவர் கல்வி மீது இருந்த மோகத்தில் எம்.பி.ஏ. மற்றும் சட்டத்திலும் பட்டங்கள் பெற்றார். 2003-ம் ஆண்டு சந்திராபூரில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக வேலையில் சேர்ந்திருக்கிறார். அங்கு ஷில்பாவும் பேராசிரியை பணியை தொடர்ந்திருக்கிறார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. ஷில்பா கணையம் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கு ஆளானவர். இருந்தபோதிலும் சுபாஷ் அவரை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்து, கரம் பிடித்துவிட்டார். இந்த தம்பதிக்கு 2008-ம் ஆண்டு ஷிதிஜும், 2010-ம் ஆண்டு துருவ்வும் பிறந்திருக்கிறார்கள்.
சுபாஷ்-ஷில்பா இருவருமே விளையாட்டு மீது ஆர்வம் கொண்டவர்கள். இருவரும் காலையில் அருகில் உள்ள விளையாட்டு அரங்கத்திற்கு சென்று விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்கள். தங்கள் மகன்கள் தாங்கள் கற்றுக்கொள்ளாத அனைத்து விளையாட்டுகளையும் விளையாட வேண்டும் என்று விரும்பி இருக்கிறார்கள். முதலில் மூத்த மகன் ஷிதிஜுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவனுக்கு ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் ஆர்வம் இருப்பது தெரியவந்ததும், அவனை ஜிம்னாஸ்டிக் வகுப்பில் சேர்த்து விட்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் துருவ் இரண்டு வயதை கடந்திருக்கிறான். அப்போது அவன் சராசரி குழந்தைகள் போல் பேசவோ, நடக்கவோ இல்லை.
"துருவ்விற்கு ஏற்பட்ட இந்த குறைபாடு களுக்கு ஷில்பாவின் நோய்தான் காரணம் என்று அக்கம்பக்கத்தினர் கூறினார்கள். அதனால் நாங்கள் கலக்கமடைந்தோம். ஒருநாள் நாங்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது துருவ் அவனது அண்ணனின் ஸ்கேட்டிங் ஷூவை அணிந்து கொண்டு வாத்து போல மெதுவாக நடக்க முயன்று கொண்டிருந்தான். அவனது ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக ஸ்கேட்டிங் பயிற்சியில் சேர்த்துவிட முடிவு செய்தோம். ஆனால் அந்த பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்சம் மூன்றரை வயதாவது இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். நாங்கள் சிறப்பு அனுமதி பெற்று அவனை ஸ்கேட்டிங் பயிற்சியில் சேர்த்தோம். அவன் ஸ்கேட்டிங்கில் விரைவிலே தொடக்கநிலையில் இருந்து அடுத்தநிலைக்கு முன்னேறினான். மேலும் 4 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான மாநில அளவிலான போட்டிகளில் தங்கப் பதக்கமும் வென்றான் என்று பெருமிதம் கொள்கிறார், சுபாஷ்.
பின்பு லிம்போ ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்று துருவ் சாதனை படைத்திருக்கிறான். அதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் அங்கீ கரிக்கப்பட்ட ஐந்து வயதை அவன் எட்டாததால் அப்போது அவனது சாதனை அங்கீகரிக்கப்படவில்லை. 2015-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் துருவ்வுக்கு இடம் கிடைத்திருக்கிறது.
சந்திரபூரில் ஸ்கேட்டிங் ஸ்டேடியம் இல்லாததால் அங்கு துருவுக்காகவே ஸ்கேட்டிங் தளத்தை உருவாக்கி இருக்கிறார்கள். மகனின் பதக்க வேட்டை தொடர்ந்து கொண்டிருந்தாலும் அவனது விளையாட்டுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க முடியாமல் சுபாஷ் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார். கல்லூரியில் சரிவர சம்பளம் வழங்கப்படாததால் கிராமத்தில் தனது பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்து அதில் வரும் வருமானத்தில் செலவுகளை சமாளித்துக்கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு துருவ் ஏழு மணி நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து சாதனையை நிகழ்த்தியிருக்கிறான்.
அவன் ஐஸ் கேட்டிங்கிலும் சாதனை படைக்க வேண்டும் என்பது ஷில்பாவின் ஆசையாக இருந்திருக்கிறது. அதற்காக ஷில்பா பணம் சேமித்து வந்திருக்கிறார். ஆனால் விதி அவருடைய வாழ்க்கையில் விளையாடிவிட்டது. கடந்த ஆண்டு ஷில்பா உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. மகனின் விளையாட்டிற்காக சேமித்த சேமிப்பு சிகிச்சைக்கு செலவாகிப் போனது. எனினும் அவரை காப்பாற்ற முடியவில்லை. ஷில்பா மரணமடைந்துவிட்டார்.
"ஷில்பாவின் மரணத்தை பற்றி எனது மகன் களிடம் பக்குவமாக எடுத்து சொன்னேன். ஆனால் தாயின் மரணத்தை துருவ்வால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. இப்போது அவனை மேலும் சாதிக்க வைத்து, ஷில்பாவின் கனவுகளை நிறைவேற்றுவதே எனது குறிக்கோள் " என்கிறார், சுபாஷ்.