காரைக்கால்,
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சுற்றுலா பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் விதமாக திருநள்ளாறு கோவில் நகர திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டப்பணிகளை விரைவுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருநள்ளாறு கோவில் விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் கேசவன், சார்பு ஆட்சியர் விக்ராந்த்ராஜா, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் சண்முகசுந்தரம், செயற்பொறியாளர்கள் ராஜசேகரன், மதிவாணன், வடக்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு மாரிமுத்து, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராஜேந்திரன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில், சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கமலக்கண்ணன் கலந்து கொண்டார்.
கூடத்தில் பங்கேற்ற அதிகாரிகளின் பல்வேறு கருத்துக்களை அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் கமலக்கண்ணன் அதிகாரிகள் மத்தியில் பேசியதாவது:-
திருநள்ளாறில் நளன் குளத்தைச் சுற்றி கட்டப்பட்ட வணிக வளாகம் மற்றும் பல்நோக்குக்கூடம் எந்தவித பயன்பாடும் இல்லாமல் உள்ளது. அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும், திருநள்ளாறு கடைத்தெருவில் கூட்ட நெரிசலை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
கோவில் நகரத் திட்டத்தின்படி, சாலைகளை மேம்படுத்துவது, தெற்கு புறவட்டச் சாலை அமைப்புப் பணி உள்ளிட்ட பணிகளை விரைவுபடுத்தவேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் பேசினார்.