சேறும், சகதியுமான பாதை
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த ஆசிச்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாச்சியார்பேட்டை கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் இருந்து 400 மீட்டர் தூரத்தில் மயான கொட்டகை உள்ளது. அந்த மயானத்திற்கு செல்ல தார் சாலை அமைக்கப்படாததால் வெயில் காலத்தில் குண்டும், குழியுமான பாதையில் அப்பகுதி மக்கள், இறந்தவர் உடலை மயானத்திற்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது.
இந்நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் மயானத்திற்கு செல்லும் பாதை சேறும், சகதியுமாக மாறி காட்சியளிக்கிறது. இதனால் இறந்தவர் உடலை இந்த வழியாக பொதுமக்கள் தட்டுத்தடுமாறி தூக்கிச்செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு செல்லும்போது சில சமயங்களில் இறந்தவர் உடலுடன் சேற்றில் சறுக்கி விழும் நிலை ஏற்படுகிறது. நேற்று முன்தினம் அப்பகுதியில் இறந்தவர் உடலை, அப்பகுதியை சேர்ந்தவர்கள் சேறும், சகதியுமான பாதை வழியாகவே தூக்கிச்சென்றனர்.
கோரிக்கை
இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும், இதுவரை தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மயானத்திற்கு செல்ல தார் சாலை அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.