மங்களமேடு,
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்த பள்ளக்காலிங்கராய நல்லூர் கிராமத்தில் வருகிற 17-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி நல்லூரில் இருந்து செந்துறை செல்லும் சாலையில் உள்ள சின்னாறு பாலத்தின் சுவற்றில் விளம்பரம் எழுதப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று காலை அந்த சுவர் விளம்பரத்தை யாரோ மர்ம நபர்கள் பெயிண்ட்டால் அழித்து உள்ளனர். இதைக்கண்ட மேட்டுக்காலிங்கராயநல்லூர், பள்ளக்காலிங்கராயநல்லூர், திருமாவளவன் பிறந்த ஊரான அருகில் உள்ள அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் 100-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் கூடி சாலை மறியல் செய்ய முயன்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூடியிருந்த நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நாளை (அதாவது இன்று) காலைக்குள் பெயிண்ட் பூசி அழித்த மர்மநபர்களை பிடித்து விடுவதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.