விருதுநகர்,
குடியரசு தினத்தையொட்டி விருதுநகர் காமராஜர் இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின்பு அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை காங்கிரசார் எடுத்துக்கொண்டனர். இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியதாவது:-
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் நடந்துள்ள முறைகேடு நாடு முழுவதும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் படித்த இளைஞர்கள் மத்தியில் அவர்கள் எதிர்காலம் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் முறைகேடு அதிகரித்து விட்டது என்பதற்கு தற்போது வெளிவந்துள்ள டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு உதாரணமாகும். இதற்கு முன்பு நடந்த தேர்வுகளும் எந்த வகையில் நடந்துள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக அரசு இதனை மூடி மறைக்க பார்க்கும் நிலையில் தமிழக கவர்னர் வெளிமாநில ஐகோர்ட்டு நீதிபதியை கொண்டு முறைகேடு தொடர்பாக முழுவிசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாங்கள் தி.மு.க.வை போல மத்திய அரசின் அனைத்து உத்தரவுகளையும் கண்மூடித்தனமாக அமல்படுத்த மாட்டோம் என்று கூறி உள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ராஜ்ஜிய சபையில் அ.தி.மு.க. வாக்குஅளித்து இருந்தால் இந்த சட்டங்கள் நிறைவேறி இருக்காது. தமிழக அரசு டாடி மோடி அரசாக செயல்பட்டு வருகிறது. ஒரேநாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தினை பல மாநிலங்கள் அமல்படுத்த முன்வராத நிலையில் தமிழகத்தில் பொதுவினியோகம் சீராக நடந்துவரும் நிலையில் இந்த திட்டத்தை அமல்படுத்துவதால் பொதுவினியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். மத்திய அரசின் உத்தரவுகளை கண்மூடித்தனமாக பின்பற்றுவதற்கு இதுவே முன்உதாரணமாகும்.
தமிழகத்தில் உள்ள சட்டம்- ஒழுங்கு நிலை குறித்து அ.தி. மு.க. கூட்டணியில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது என்று கூறிய கருத்துக்கு நான் உடன்படுகிறேன். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் தான் பதில் சொல்லவேண்டும். குமரியில் போலீஸ் அதிகாரி கொலை, சிவகாசியில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை போன்ற சம்பவங்கள் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதை வெளிப்படுத்துகிறது. தமிழக அரசு சட்டம்-ஒழுங்கை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தஞ்சையில் கும்பாபிஷேகம் தொடர்பாக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் வழிபாடு நடைபெறும் என்று தெரிவித்து இருப்பது மத்திய பா.ஜ.க. அரசின் கொள்கைப்படி தான். இதற்கு அமைச்சர் தான் பதில் சொல்லவேண்டும். இவ்வாறு அவர் பேட்டி அளித்தார். பேட்டியின்போது விருதுநகர் நகரசபை முன்னாள் துணைதலைவர் பாலகிருஷ்ணசாமி உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.