மாவட்ட செய்திகள்

குமரியில் உள்நாட்டு மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க தனி அலுவலகம் அ.தி.மு.க. வேட்பாளர் தளவாய்சுந்தரம் வாக்குறுதி

குமரியில் உள்நாட்டு மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க தனி அலுவலகம் அமைக்கப்படும் என கன்னியாகுமரி சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தளவாய்சுந்தரம் வாக்குறுதி அளித்துள்ளார்.

தினத்தந்தி

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக தளவாய்சுந்தரம் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் கிராமம், கிராமமாக சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

தோவாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகியபாண்டியபுரம் பேரூராட்சி பகுதியில் தளவாய் சுந்தரம் நேற்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். கடுக்கரை விலக்கு, புதுகிராமம், மேலப் புதூர், கேசவன்புதூர், தேவசகாயபுரம், பெருந்தலைக்காடு, அழகியபாண்டியபுரம் சந்திப்பு, குறத்தியறை, கீரங்குளம், எட்டாமடை, பிளவக்கல்விளை, மேல்கரை, பேயோடு, செம்பொன்விளை, மடவிளாகம் உள்ள பல்வேறு கிராமங்களுக்குச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது தளவாய்சுந்தரம் பேசியதாவது:-

உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறையின் அரசு ஆணைப்படி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களிலும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன் பாசி குத்தகை உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உள்நாட்டு மீனவர்கள் நல வாரியம் அமைக்கவும், அதே வேளையில் மற்ற நலவாரியத்தில் உள்ளவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது போல் கடற்கரை மற்றும் உள்நாட்டு மீனவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கும். அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம் ஆகிய ஒன்றிய பகுதிகளில் உள்ள உள்நாட்டு மீனவர்களின் நலன் காக்கவும், அவர்களுடைய தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்காகவும் நாகர்கோவிலில் உள்நாட்டு மீனவர்களுக்கு என்று தனியாக ஒரு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் அந்த முக்கியமான கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் குடியிருப்பதற்கு சொந்தவீடு இல்லாதவர்களுக்கு, கிராமப்புறங்களில் அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். நகர் பகுதிகளில் அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி அம்மா இல்லம் திட்டம் மூலமாக விலையில்லாமல் வழங்கப்படும்.

சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட குல விளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும், உதவித்தொகையாக ரூ.1,500 வழங்கப்படும். இந்த தொகை குடும்பத்தலைவியின் வங்கி கணக்கிலும், ஆண்கள் மட்டுமே உள்ள குடும்பத்தில் உள்ள ஆண்களின் வங்கி கணக்கிலும் செலுத்தப்படும்.

நகர பஸ்களில் பயணம் செய்யும் மகளிருக்கு பஸ் கட்டணத்தில் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும். பொது வினியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களின் வீடுகளுக்கே நேரிடையாக சென்று வழங்கப்படும்.

விவசாயிகளின் உற்பத்தியை பெருக்கவும், அதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7,500 உழவு மானியம் வழங்கப்படும். அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் விலையில்லா சூரியசக்தி சமையல் அடுப்பு வழங்கப்படும். பெண்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்குடன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அம்மா வாஷிங்மிஷின் வழங்கப்படும். மாணவர் மற்றும் பெற்றோர் நலன் காக்க கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும். கல்லூரி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 2 ஜி.பி. டேட்டா ஆண்டு முழுவதும் வழங்கப்படும்.

உலகளவில் புகழ்பெற்ற ஹார்வேர்டு, ஆக்ஸ்போர்டு, ஏல், கேம்பிரிஜ், எம்.ஐ.டி. போன்ற பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 10 சர்வதேச தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்படும்.

அகஸ்தீஸ்வரம் தோவாளை பகுதியில் உள்ள உள்நாட்டு மீனவர்களின் கோரிக்கைக்கு இணங்க உள்நாட்டு மீனவர்கள் நல வாரியம் அமைக்கப்படும் அதன் மூலம் அவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படும். கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் விரிவுபடுத்தப்படும். மீனவர்கள் குறைவில்லாமல் தங்கள் மீன்பிடித் தொழிலை செய்வதற்கான தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டு மீன்பிடித் தொழில் செழிக்க வழிவகை செய்யப்படும்.

கன்னியாகுமரியில் இருந்து மீன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். கன்னியாகுமரி தொகுதிக்கு உட்பட்ட கடற்கரை கிராமங்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்காக பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும். கன்னியாகுமரி பெரியநாயகி தெரு, கோவளம் ஆகிய பகுதிகளில் உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தோவாளை ஒன்றிய பகுதியில் காட்டு பன்றிகளின் தொல்லையில் இருந்து விவசாய விளை நிலங்களை பாதுகாக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலன் காக்கும் அரசாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மீண்டும் 3-வது முறையாக அ.தி.மு.க. அரசு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடர நடைபெற இருக்கின்ற சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு தளவாய்சுந்தரம் பேசினார்.

இந்த பிரசார நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகிருஷ்ணன், தோவாளை வடக்கு ஒன்றிய செயலாளர் பொன். சுந்தர்நாத், பேரூர் செயலாளர் முத்துராஜ், கிளைச் செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து