பெங்களூரு,
பெங்களூரு ஜாலஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எம்.இ.எஸ். ரோட்டில் ராகுல் சஞ்சய் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை மற்றும் அடகு கடை உள்ளது. கடந்த 20-ந் தேதி காலையில் அவர் வழக்கம் போல கடையை திறந்து வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது தங்க சங்கிலி வாங்குவதற்காக 2 பேர் கடைக்கு வந்திருந்தனர். அவர்கள் முதலில் ராகுலிடம் தங்க சங்கிலி வேண்டும் என்று கேட்டனர். அவரும் தங்க சங்கிலியை எடுத்து கொடுத்தார். அதில் ஒரு தங்க சங்கிலி பிடித்துவிட்டதாகவும், மற்றொரு தங்க மோதிரம் கொடுக்கும்படி 2 பேரும் கேட்டுள்ளனர்.
உடனே கடையில் லாக்கர் இருந்த மற்றொரு அறைக்குள் ராகுல் சென்றார். அந்த சந்தர்ப்பத்தில் அறைக்குள் சென்ற 2 மர்மநபர்களும், ராகுலிடம் கத்தியை காட்டி மிரட்டினார்கள். மேலும் துப்பாக்கி முனையில், அவரது கை, கால்களை கட்டிப்போட்டதுடன், வாயில் துணியை வைத்து அமுக்கினார்கள். பின்னர் கடையில் இருந்த 3 கிலோ 455 கிராம் தங்க நகைகள், 715 கிராம் வெள்ளி, ரூ.3 லட்சத்து 96 ஆயிரத்தை 2 மர்மநபர்களும் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.
இதுகுறித்து ஜாலஹள்ளி போலீஸ் நிலையத்தில் ராகுல் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட கொள்ளையர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நகைக்கடையில் உள்ள கேமரா மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தார்கள்.
இந்த நிலையில், தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ராகுல் நகைக்கடையில் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோபாராம் (வயது 28), ஜிதேந்தர் மாலி (31), வீர்மாராவ் (32) என்று தெரியவந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
இந்த கொள்ளை வழக்கில் கைதாகி உள்ள கோபாராம் தான் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. கடந்த 2004-ம் ஆண்டு அவர் ராஜஸ்தானில் இருந்து பெங்களூருவுக்கு வேலைத்தேடி வந்திருந்தார். முதலில் ஒரு நகைக்கடையில் வேலை செய்துள்ளார். பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு பாகலூரில் உள்ள மற்றொரு நகைக்கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அந்த நகைக்கடையில் கடந்த 2016-ம் ஆண்டு கோபாராம் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தங்க நகைகளை கொள்ளையடித்திருந்தார்.
இந்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு மீண்டும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, ராகுல் நகைக்கடையிலும் கொள்ளையடிக்க கோபாராம் உள்பட 3 பேரும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவரது கடையில் எப்போது வாடிக்கையாளர்கள் இல்லாமல் உள்ளனர் என்பதை அடிக்கடி சென்று கவனித்துள்ளனர்.
அப்போது காலையில் ராகுல் மட்டுமே கடையில் தனியாக இருப்பது பற்றி 3 பேரும் அறிந்து கொண்டனர். அதன்படி, கடந்த 20-ந் தேதி அவரது கடைக்கு சென்று துப்பாக்கி காட்டி மிரட்டி தங்க நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கைதான 3 பேரிடம் இருந்து 1 கிலோ 757 கிராம் தங்க நகைகள், ரூ.3 லட்சம், 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஏர்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.90 லட்சம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் ராகுல் கடையில் கொள்ளையடித்த மற்ற நகைகளை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கைதான 3 பேர் மீதும் ஜாலஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.