மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பார்வையாளர் கட்டணம் செலுத்தி கண்டுகளிக்கும் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் போன்ற புராதன சின்னங்கள் கொரோனா ஊரடங்கால் இன்னும் திறக்கப்படவில்லை. பார்வையாளர் கட்டணமின்றி அனுமதிக்கப்படும் அர்ச்சுனன் தபசு, கிருஷ்ண மண்டபம், மிகிஷாசூரமர்த்தினி மண்டபம் உள்ளிட்ட ஒரு சில புராதன சின்னங்களை மட்டும் கடந்த சில வாரங்களாக வரும் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து விட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (காந்தி ஜெயந்தி), சனி, ஞாயிறு ஆகிய தொடர் விடுமுறையால் வட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் திரண்டு வந்திருந்தனர். அவர்கள் சாலையோரம் கட்டணமின்றி பார்க்கும் புராதன சின்னங்களை மட்டும் பார்த்து புகைப்படம் எடுத்து ரசித்தனர்.
பூட்டு போட்டு மூடப்பட்டுள்ள கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களை குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாமல் சாலையோரத்தில் தொலைவில் நின்று பார்த்து ரசித்துவிட்டு தங்கள் குடும்பத்துடன் புகைப்படம் மட்டுமே எடுத்த நிலையில் பலர் அருகில் சென்று பார்க்க முடியாத ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காண முடிந்தது. ஒரு சில சுற்றுலா பயணிகள் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.
தொடர் விடுமுறையால் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் திரண்டதால் கடற்கரை சாலையில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து நின்றதையும் நேற்று காண முடிந்தது.