காரைக்கால்,
நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த கபிலன் (வயது 50), தேவதாஸ் (55), தேத்தாக்குடியை சேர்ந்த ராமசாமி (55) மற்றும் கோவில்பத்தை சேர்ந்த கோவிந்தசாமி (50) ஆகியோர் கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர். அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர்.
அதே மாதம் 31-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கந்தையா (42), ராமு (48), ஆண்டி (62) மற்றும் விருதுநகரை சேர்ந்த பொன்னுசாமி (37) ஆகிய 4 பேரும், செப்டம்பர் 11-ந் தேதி ராமேசுவரத்தை சேர்ந்த கருப்பையா (43), பிராங்கோ (22), கருணாநிதி (43), ரமேஷ் (42) மற்றும் வல்லரசு (51) ஆகிய 5 பேரும், மற்றொரு விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த ராஜபாண்டி துரை (28), ராஜ் (34), ரமேஷ் (32), பரமணி (38), அருள்யோகராஜ் (51), மலைச்சாமி (49) மற்றும் சகாயராஜ் (22) ஆகிய 7 பேரும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களது விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரும் அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டன. அதன்பேரில் 20 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு, அங்குள்ள இந்திய தூதரகத்தின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
நேற்று காலை இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல் மூலம் 20 மீனவர்களும் நடுக்கடலில் சர்வதேச எல்லைக்கு அழைத்து வரப்பட்டு மதியம் 12.45 மணியளவில் இந்திய கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை ஏற்றிக் கொண்டு, இந்திய கடலோரக் காவல்படைக்கு சொந்தமான அமயா ரோந்து கப்பல் நேற்று இரவு 7 மணியளவில் காரைக்கால் கீழவாஞ்சூரில் உள்ள காரைக்கால் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.
மீனவர்களை இந்திய கடலோர காவல்படை காரைக்கால் மைய கமாண்டர் சோமசுந்தரத்திடம், அமயா கப்பல் கேப்டன் பானுகுப்தா ஒப்படைத்தார். விசாரணைக்கு பிறகு தமிழக மீனவர்கள் 20 பேரையும் நாகை, ராமநாதபுரம் மற்றும் மண்டபம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் கமாண்டர் சோமசுந்தரம் முறைப்படி ஒப்படைத்தார். பின்னர் மீனவர்கள் அனைவரும் தமிழக அரசு சார்பில் வேன்கள் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.