சமயபுரம்,
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள பி.கே.அகரம் கிராம நிர்வாக அதிகாரி ஜீவா(வயது 26). இவரும், பெருவளப்பூர் கிராம நிர்வாக அதிகாரி பிரபாகரன் (35), அவருடைய உதவியாளர் முகமதுஅலி ஜின்னா (30) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் மாலை லால்குடி தாலுகா அலுவலகத்திலிருந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசின் வேட்டி-சேலைகளை ஒரு வேனில் ஏற்றி வந்தனர்.
பெருவளப்பூர் அருகே வந்தபோது அதே பகுதியை சேர்ந்த சாமிநாதபுரம் காலனியை சேர்ந்த செல்வகுமார் (40), சின்னசாமி ஆகிய 2 பேரும் தங்களது செல்போனில் வேட்டி-சேலைகள் இறக்குவதை படம் பிடித்து கொண்டிருந்தனர்.
இதுகுறித்து கேட்டபோது கிராம நிர்வாக அதிகாரிகளுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த இருவரும், கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் உதவியாளரை திட்டி கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஜீவா காயமடைந்தார்.
இதுகுறித்து சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் ஜீவா கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்து செல்வகுமார், சின்னசாமியை கைது செய்தார். இந்த சம்பவத்தால் நேற்று இலவச வேட்டி சேலைகள் வழங்கும் பணி நெய்குளம், ஊட்டத்தூர், தெரணிபாளையம், சிறுகளப்பூர், கண்ணாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் நிறுத்தப்பட்டது.