திருச்சி,
திருச்சி அருகே உள்ள எட்டரையில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் விவசாயிகளின் நகைகளை அடகு பிடிப்பது வழக்கம். பின்னர் அடகு வைத்த நகைகளை உரிய பணத்தை செலுத்தி விவசாயிகள் மீட்டுச்செல்வார்கள். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட்டுறவு வங்கியில் உள்ள கோப்புகளை துணை பதிவாளர் பாலச்சந்திரன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை வங்கியில் நகைகளை அடகு வைத்து இருந்த 42 பேர் உரிய தொகையை செலுத்தி தங்களது நகைகளை மீட்டு இருந்தனர். ஆனால் அவர்கள் செலுத்திய தொகை ரூ.40 லட்சத்து 46 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படாமல் கையாடல் செய்யப்பட்டது தெரியவந்தது. உடனே அவர் இது குறித்து திருச்சியில் உள்ள வணிக குற்றப்புலனாய்வுபிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.
செயலாளர் உள்பட 2 பேர் கைது
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் உமா, சப்-இன்ஸ்பெக்டர் சுகுணா ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வங்கியில் செலுத்த வேண்டிய தொகையை வங்கி செயலாளர் முத்துகிருஷ்ணன்(வயது 52), கூட்டுறவு வங்கி கட்டுப்பாட்டின் கீழ் அதே பகுதியில் உள்ள ரேஷன் கடை விற்பனையாளர் ரஞ்சன்(45) மற்றும் வங்கியின் உறுப்பினர்கள் கையாடல் செய்து இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக வணிக குற்றப்பிரிவு போலீசார் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் செயலாளர் முத்துகிருஷ்ணன், ரேஷன்கடை விற்பனையாளர் ரஞ்சன் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர்.