மாவட்ட செய்திகள்

குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்.

பந்தலூர்,

பந்தலூர் அருகே உள்ள வாழவயல் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நெல்லியாளம் நகராட்சி சார்பில் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் நேற்று காலை 8 மணியளவில் தேவாலா-கரியசோலை சாலையில் காலி குடங்களுடன் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தேவாலா போலீசார் மற்றும் நெல்லியாளம் நகராட்சி அலுவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.