புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் தனியார் பால் நிறுவனங்கள் தொடர்பாக நடந்த விவாதம் வருமாறு:-
கலப்பட பால்
அன்பழகன்:- தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் அரசு பாலை தவிர தனியார் நிறுவன பாலில் ரசாயனங்கள் உள்ளிட்ட மனித உயிருக்கு தீங்கும் விளைவிக்கும் பொருட்கள் கலக்கப்படுவதாக உறுதி செய்யப்பட்ட குற்றச்சாட்டை தமிழக பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுவை மாநிலத்தில் பாண்லே மற்றும் பல தனியார் நிறுவனங்கள் சார்பில் பால் விற்பனை செய்யப்படுகிறது.
பால் கெடாமல் இருக்க காயத்தில் இருக்கும் அழுக்கு களை நீக்க மருத்துவர்களால் உபயோகப்படுத்தப்படும் ஹைட்ரஜன் பெராக்சைடு, காஸ்டிக் சோடா போன்ற பொருட்களை தேவைக்கேற்ப கலக்கிறார்கள்.
புதுவை மாநிலத்துக்கு தினந்தோறும் 1 லட்சம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. நமது உற்பத்தி 50 ஆயிரம் லிட்டர்தான். மீதி நம் மாநில தேவைக்கேற்ப தனியார் நிறுவனங்கள் பெறப்படுகின்றன. கலப்படம் இல்லாத பாலில் கொழுப்புசத்து 4 சதவீதமும், கொழுப்பு சத்து இல்லாத புரத சத்து 8.5 சதவீதமும் இருக்கவேண்டும். கறந்த பாலில் முதலிலேயே வெண்ணெய் எடுப்பதால் தேவையான கொழுப்பு சத்து மற்றும் புரத சத்துகள் இருப்பதில்லை. அதை சரிசெய்ய யூரியா, கெமிக்கல் போன்ற பல ரசாயன பொருட்களை கலக்கின்றனர்.
அலட்சியம் கூடாது
சில வருடத்திற்கு முன்பு இந்திய தரக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வுசெய்தபோது புதுச்சேரி பாண்லே நிறுவனத்தில் தரமான பால் விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டு இருந்தது. அப்போது பாண்லே நிறுவனத்திற்கு தேவையான பால் புதுச்சேரி சொசைட்டியிலேயே கிடைத்தது. கலப்பட பாலால் பெரியவர்களுக்கும் கேன்சர், ரத்த அழுத்தம், நீரழிவு உள்ளிட்ட பல நோய்கள் வர வாய்ப்புள்ளது.
புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் தனியார் பாலை ஆய்வு செய்வதே கிடையாது. அதற்கு போதுமான அதிகாரிகளும் நம்மிடம் இல்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் அன்றாடம் உபயோகப்படுத்தப்படும் பாலில் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. அரசு இதில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
உணவு பாதுகாப்பு பிரிவு அத்தாரிட்டி இந்தியாவில் ஆய்வு நடத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் தனியார் பால் நிறுவனங்களின் செயல்பாடுகளை அரசு உடனடியாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்களின் உயிர் சம்பந்தமான பிரச்சினை என்பதால் இதில் அரசு அலட்சியமாக நடத்தக்கூடாது.
சிறைக்கு அனுப்புவோம்
அமைச்சர் கந்தசாமி:- இந்த பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சரும் என்னிடம் பேசியுள்ளார். தனியார் பால் தொடர்பாக ஆய்வு செய்ய கூறியுள்ளார். பாண்லேவுக்கு வாங்கும் பாலை நாங்கள் ஆய்வு செய்துதான் வாங்குகிறோம்.
சிவா (தி.மு.க.):- இந்த பிரச்சினைக்கு ஒட்டுமொத்தமாக கூட்டுறவு அமைச்சர் பதில் சொல்ல முடியாது. அவர் பாண்லேவுக்கு மட்டும்தான் பதில் சொல்ல முடியும். சுகாதார அமைச்சர்தான் இதற்கு ஒட்டுமொத்தமாக பதில் அளிக்கவேண்டும்.
அமைச்சர் கந்தசாமி:- நமது மாநில மக்கள் அதிகபட்சமாக பாண்லே பால்தான் வாங்குகின்றனர். நமக்கு மக்கள் மீது அக்கறை உள்ளது. இந்த விஷயத்தில் தனியாரிடம் தவறு நடந்தால் நடவடிக்கை எடுப்போம். அவர்களை சிறைக்கு அனுப்பக்கூட தயாராக உள்ளோம்.
முதல்-அமைச்சர் நாராயணசாமி:- பாலில் கலப்படம் தொடர்பாக தமிழகத்தில் பெரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பாலில் கலப்படம் செய்பவர்களை விட்டு வைக்கமாட்டோம். இதில் கண்டிப்பாக தனிக்கவனம் செலுத்துவோம்.
அனந்தராமன் (காங்):- இதேபோல் தரமற்ற தண்ணீர் பாக்கெட்டுகளும் நிறைய வருகின்றன. அதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.