மும்பை,
மும்பை கோரேகாவ் மேற்கு ரெயில்நிலையம் அருகே உள்ள கட்டிடத்தில் 7-வது மாடியில் வசித்து வருபவர் உமேஷ் (வயது48). இவரது மனைவி பிந்து(42). இந்த தம்பதிக்கு நிகிதா(24), அங்கிதா(22) என்ற இரு மகள்களும், அனிகேத்(16) என்ற மகனும் உள்ளனர். உமேஷ் மலாடு கிழக்கு பகுதியில் லாட்டரி கடை நடத்தி வருகிறார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு பல லட்ச ரூபாய் கடன் இருப்பதாக கூறப்படுகிறது. உமேஷ் கடனை திரும்ப கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார்.
இந்தநிலையில் இவர் சம்பவத்தன்று இரவு மது அருந்திவிட்டு குடிபோதை யில் வீட்டிற்கு வந்தார். பின்னர் நள்ளிரவு நேரத்தில் அவர் தூக்கத்தில் இருந்து எழுந்தார். தொழில் நஷ்டத்தால் விரக்தி அடைந்த அவர் குடும்பத்தினரை கொலை செய்து, தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.
இதையடுத்து சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்த அவர், தனது அருகில் தூங்கிக்கொண்டு இருந்த மனைவியை முதலில் சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத் தில் சரிந்தார். பின்னர் அவர் பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டு இருந்த மகன் மற்றும் மகள்களையும் கத்தியால் குத்தினார். இந்தநிலையில் ஒரு மகள் மட்டும் அப்பாவின் பிடியில் இருந்து தப்பி வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்து உதவிகேட்டு அலறினார். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், மகள்கள் இருவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப் படுகிறது. மனைவி, மகனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மனைவி, பிள்ளைகளை கொலை செய்ய முயன்ற உமேஷ் போலீஸ் நிலையம் சென்று சரணடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.