கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பாரதி நகரை சேர்ந்தவர் குமார் (வயது 41). தொழிலாளி. இவர் கடந்த 22-ந் தேதி முதல் கிருஷ்ணகிரி பைரப்பா காலனியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். இவர் தினமும் அளவிற்கு அதிகமாக மது குடித்துவிட்டு விடுதிக்கு வந்து தூங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மது குடித்துவிட்டு விடுதிக்கு வந்து படுத்த குமார் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி மேலாளர் கோவிந்தராஜ் மற்றும் ஊழியர்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர். அப்போது அவர் படுக்கையில் பேச்சு, மூச்சு இல்லாமல் கிடந்தார். இது குறித்து கோவிந்தராஜ் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தங்கும் விடுதியில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.