மாவட்ட செய்திகள்

உலக பசி தினத்தையொட்டி வேலூரில் இயலாதவர்களுக்கு உணவளித்த இளையதலைமுறை

வேலூரில் சமூக வலைதளம் மூலம் ஒன்றிணைந்த இளையதலைமுறை இயலாதவர்களுக்கு உணவளித்தனர்.

தினத்தந்தி

வேலூர்,

சமூக வலைதளம் மூலம் ஒன்றிணைந்த இளைஞர்கள், இளம்பெண்கள் உலக பசி தினத்தையொட்டி வேலூரில் இயலாதவர்களுக்கு உணவளித்தனர். அவர்களை, பொதுமக்கள் பாராட்டினர்.

ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்டெடுக்க தமிழக இளைஞர்களின் புரட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தது. அந்தப் புரட்சிக்கு அடித்தளமிட்டது, சமூக வலைதளமான முகநூல் (பேஸ்புக்) ஆகும். அதன் மூலம் அவர்கள் ஒன்றிணைந்து போராடினார்கள்.

சமூக வலைதளங்களில் பலர் பல்வேறு குழுக்களைத் தொடங்கி சமூக தொண்டுகளைச் செய்து வருகின்றனர். அவ்வாறு முகமறியாத வேலூர் மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பலர் முகநூல் மூலமாக மை ட்ரீம் வேலூர் எனும் ஒரு குழுவை தொடங்கி அதில் ஒன்றிணையத் தொடங்கினர். அவர்கள் கடந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தைப் பசுமையானதாக மாற்ற ஒரு லட்சம் விதைப்பந்துகள் தயாரித்து வனப்பகுதியில் வீசியது அனைத்துத் தரப்பினரிடையே வரவேற்பை பெற்றது.

இதையடுத்து அவர்கள் சமூக அக்கறையுடன் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதில் ஒன்று தான் இயலாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம். இத்திட்டம் தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் அவர்கள் தங்களுடைய பிறந்தநாளை ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாட ஆரம்பித்தனர். அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், அதை தொடர்ச்சியாக செய்ய முடிவு செய்தனர். திருமணம், புதுமனை புகுவிழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் வீணாகும் உணவை பெற்று, அதை சிறு சிறு பொட்டலங்களாக கட்டி கைவிடப்பட்டவர்கள், இயலாதவர்களுக்குக் கொடுத்து உதவி செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவுகளை வழங்கி அவர்களின் திட்டத்திற்கு வலு சேர்த்தனர்.

இந்தநிலையில் உலக பசி தினத்தையொட்டி வேலூர் மாநகரில் இயலாதவர்களுக்கு காலை முதல் இரவு வரை உணவு வழங்க முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் முகநூல் மற்றும் வாட்ஸ் அப் மூலம் நன்கொடை திரட்டினர். இவர்களுக்கு பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி ஆதரவு தெரிவித்தனர். மேலும் பலர் அந்தக் குழுவில் இணைந்தனர். அதன்படி நேற்று (உலக பசி தினம்) அவர்கள் இயலாதவர்களுக்கு உணவுகளை வழங்கினர். 6 குழுக்களாக பிரிந்து வேலூர் பழைய, புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம், கஸ்பா போன்ற பல்வேறு இடங்கள், அனாதை இல்லம், முதியோர் இல்லத்திற்கும் சென்று உணவுகளை வழங்கினர்.

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் அவர்கள் வழங்கியபோது பல பயணிகளும் அவர்களிடம் உணவு வாங்கி சாப்பிட்டனர். ஒரு குழுவினர் வேலூர் கோட்டைக்குள் உணவுப் பொட்டலங்களைத் தயாரித்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இளைஞர்களின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டினர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை