திருச்சி,
தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி மற்றும் வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளுக்கு பொதுப்பெயரிடுவது குறித்து ஆய்வுக்குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது.
அக்குழுவினரின் பரிந்துரையை ஏற்று, தேவேந்திர குல வேளாளர் என பொதுப்பெயரிட மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்யும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அப்பிரிவினர் ஏற்கனவே பெற்று வந்த சலுகைகளும் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
அனுமதி மறுப்பு
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவை கண்டித்து அகில இந்திய வ.உ.சி. பேரவையினர் (அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பு) தொடர் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் திருச்சி பழைய திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகே அகில இந்திய வ.உ.சி. பேரவை சார்பில், தமிழக அரசு, 7 உட்பிரிவுகளையும் ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க பரிந்துரை செய்ததை வாபஸ் பெற வேண்டும் என்றும், தமிழக முதல்-அமைச்சரை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
கொரோனா காலகட்டமாக இருப்பதால் போலீசார் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. போலீசாரின் தடையை மீறி நேற்று காலை 11 மணி முதல் ஆர்ப்பாட்டம் நடத்திட அணி, அணியாக அப்பேரவையினர் கோஷமிட்டபடி திரண்டு வந்தனர்.
ஊர்வலம்-ஆர்ப்பாட்டம்
வெளியூர் மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் இருந்து வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் ஆண்கள், பெண்கள் என வந்திறங்கினர். பின்னர், திருச்சி விக்னேஷ் ஓட்டல் அருகே அகில இந்திய வ.உ.சி. பேரவையின் மாநில தலைவர் லேனா.லெட்சுமணபிள்ளை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கிருஷ்ணமூர்த்தி, மாநில பொருளாளர்வயி.ச.வெங்கடாசலம் பிள்ளை, கவுரவ தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது இளைஞர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் எஸ்.பி.ஐ. வங்கியின் பிரதான சாலையில் இருந்து போராட்டம் நடந்த இடத்திற்கு ஊர்வலமாக கோஷம் எழுப்பியபடி வந்தனர். அவர்கள், திருவள்ளுவர் பஸ் நிலைய ரவுண்டானா வந்தபோது திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அறிவுறுத்தி போராட்டம் நடக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பஸ்சை மறித்தனர்
ஆர்ப்பாட்டம் முடிந்து முக்கிய நிர்வாகிகள் காரில் ஏறி புறப்பட்டு சென்றனர். பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள், அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதோடு, நாங்கள் தான் வேளாளர் சமூகம். எங்கள் இனப்பெயரை இன்னொரு பிரிவுக்கு வைப்பதா? என்று குரல் எழுப்பினர். அவர்களை, வ.உ.சி. பேரவை அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் போலீசார் கட்டுப்படுத்த முயன்றும் அவர்கள் கேட்கவில்லை. அப்போது, அவ்வழியாக மத்திய பஸ் நிலையம் நோக்கி சென்ற பஸ் ஒன்றை இளைஞர்கள் சிலர், கட்டுப்பாடுகளையும் மீறி பஸ்சின் பக்கவாட்டில் தட்டி பதற்றத்தை ஏற்படுத்தினர்.
இதனால், பஸ்சில் அமர்ந்திருந்த பயணிகள் பீதிக்குள்ளானார்கள். அத்துடன் இல்லாமல், ரவுண்டானா பகுதியில் அமர்ந்து கைகளை உயர்த்தியவாறு மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெண் போலீஸ் மீது மதுபாட்டில் வீச்சு
அவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த நபர் ஒருவர், தனது இடுப்பில் சொருகி வைத்திருந்த மதுபாட்டிலை போலீசாரை நோக்கி வீசினார். அந்த பாட்டில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் தொப்பியை உரசியவாறு சென்று, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பாலக்கரை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் ருக்குமணி மீது விழுந்தது.
மதுபாட்டிலை அவர், இரு கைகளாலும் தடுக்க முயற்சித்தபோது அவரது இடது கையில் பட்டு தெறித்து பாட்டில் உடைந்து சாலையில் விழுந்தது. இதனால், அவருக்கு காயம் ஏற்பட்டது. பாட்டில் முழுவதும் மதுவுடன் போலீசாரை நோக்கி வீசியதால் போலீசார் ஆவேசம் அடைந்தனர்.
தடியடி நடத்திவிரட்டியடிப்பு
அத்துடன் எந்தவித கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசுக்கும், வ.உ.சி. பேரவையை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். இரு கைகளாலும் லத்தியை பிடித்து கொண்டு மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். அப்போது 2 லத்தி உடைந்து விட்டது.
அடிதாங்காமல் வ.உ.சி. பேரவையினர் நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்தனர். இதனால், அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. ஆங்காங்கே செருப்புகள் சிதறி கிடந்தன. மேலும் மோதலுக்கு காரணமானவர்களை போலீசார் விரட்டிச்சென்று பிடித்து வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.
65 பேர் கைது
கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்தும், சமூக விலகலை கடைபிடிக்காமலும் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டதுடன், போலீசார் மீது மதுபாட்டிலை வீசி வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக அகில இந்திய வ.உ.சி. பேரவையை சேர்ந்த 50 பெண்கள் உள்பட 500 பேர் மீது திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், பொது இடத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் வகையில் போராட்டத்தை தூண்டியதாக 65 பேரை போலீசார் கைதுசெய்தனர்.