ஈரோடு,
அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக கிராம உதவியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நம்பியூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில் 21 கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் சத்தியமங்கலம் தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மாலை வரை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சத்தியமங்கலம் கிளை பொருளாளர் ராஜூ தலைமை தாங்கினார். இதில் 55 கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை கிராம உதவியாளர்கள் அந்தியூர் வட்டார தலைவர் சந்திரன் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இதையொட்டி அந்தியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.
பெருந்துறை தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில் 15-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.