செய்திகள்

வேலாயுதம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் குழந்தை கடத்தல்: டிப்-டாப் ஆசாமிக்கு வலைவீச்சு

வேலாயுதம்பாளையம் அருகே 2 வயது குழந்தையை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற டிப்-டாப் ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

நொய்யல்,

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள பாலத்துறை செல்லப்பகவுண்டர் தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி விஜயலெட்சுமி. இந்த தம்பதிக்கு மிதுன் (வயது 2) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கார்த்திக் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தவுட்டுப்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அங்கு விஜயலெட்சுமி துணி துவைத்துக் கொண்டிருந்தார். கார்த்திக் தனது குழந்தைகளுடன் கரையில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் டிப்-டாப் உடை அணிந்து கொண்டு மர்மநபர் ஒருவர் வந்தார். பின்னர் கார்த்திக் மற்றும் விஜயலெட்சுமியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மிதுன் டிப்-டாப் ஆசாமி வந்த மோட்டார் சைக்கிளில் ஏற வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு விஜயலெட்சுமி மறுப்பு தெரிவித்தார். இருப்பினும் மிதுனை அந்த நபர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஆற்றங்கரையோரத்தில் சுற்றிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் குழந்தையுடன் சுற்றிக்கொண்டிருந்த டிப்-டாப் நபரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மிதுனின் பெற்றோர் அப்பகுதியில் மகனை தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் மிதுன் கிடைக்கவில்லை. அதன்பிறகு தான் மிதுனை மோட்டார் சைக்கிளில் வந்த டிப்-டாப் ஆசாமி கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து விஜயலெட்சுமி வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கடத்திச் சென்ற ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை