புதுடெல்லி,
டெல்லியில் அரசு நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான 12ம் வகுப்பு தேர்வு முடிவில் சனா நியாஸ் என்ற மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். டெல்லியின் ஜமா மஸ்ஜித் பகுதியில் சர்வோதயா கன்யா வித்யாலயா பள்ளி கூடத்தில் படித்த இவர் 97.6 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
நியாசின் 3 சகோதரிகளும் இதே பள்ளி கூடத்தில் படித்துள்ளனர். அவர்களில் ஒருவர் 12ம் வகுப்பில் பள்ளியில் முதல் இடம் பிடித்துள்ளார். மற்ற இரு சகோதரிகளும் சிறந்த மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
இவரது தந்தை அல் ஜவஹர் என்ற விடுதியில் சமையல்காரராக உள்ளார். இவரது தாய் குடும்ப தலைவியாக உள்ளார். தேர்வில் முதல் இடம் பிடித்தது பற்றி கூறிய நியாஸ், நான் தனியாக டியூசனுக்கு எதுவும் செல்லவில்லை. ஏனெனில் என்னுடைய அனைத்து சந்தேகங்களையும் தீர்ப்பதற்காக எனது சகோதரிகள் இருந்தனர். மூத்த சகோதரிகள் அதிக மதிப்பெண்களை பிடித்திருந்த நிலையில் அந்த மதிப்பை தக்க வைக்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. ஆனால் நான் மனம் தளரவில்லை என கூறியுள்ளார்.
தேர்வு முடிவுக்கு பின் டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா இவரது குடும்பத்தினரை அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என அவர்கள் கூறியுள்ளனர். நியாசின் இளைய சகோதரி இதே பள்ளி கூடத்தில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.