நம்பியூர்,
ஈரோடு மாவட்டம் கோபி குள்ளம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு இலவச பட்டய கணக்காளர் ஆன்-லைன் பயிற்சியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று தொடங்கிவைத்தார்.
அதன் பின்னர் கோபி அருகே உள்ள நம்பியூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் தொடர்ந்து பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றனர் என அறிவித்துள்ளார். காலாண்டு தேர்வில் 40 சதவீதமும், அரையாண்டு தேர்வில் 40 சதவீதமும், 20 சதவீதம் வருகைப் பதிவேட்டின் அடிப்படையிலும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக ஆன்லைன் பட்டய பயிற்சி வகுப்புகள் இன்று (அதாவது நேற்று) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல் முதலாக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
செப்டம்பர் மாதம் 20-ந் தேதி வரை இந்த பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியை மேற்கொள்ள விருப்பப்படும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களை சந்தித்து பதிவு செய்துகொள்ளலாம். இதன் பதிவு செய்யும் வழிமுறைகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை மூலம் விவரிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் 3 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் தான் இந்தியாவில் உள்ளனர். இந்தியாவிற்கு தற்போது 10 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் தேவைப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு தற்போது பட்டயக் கணக்காளர்களை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இம்மாதம் இறுதிக்குள் மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டுக்கான புத்தகங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.