நாமக்கல்,
நாமக்கல்-சேலம் சாலை ராஜீவ்காந்தி நகரில் வசித்து வருபவர் ராஜகோபால் (வயது 42). இவர் நாமக்கல் பஸ்நிலையம் அருகே கடந்த 18 ஆண்டுகளாக இணையதள சேவை மையம் நடத்தி வருகிறார். இந்த மையத்தில் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த மையத்தில் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புதல், மின்சார கட்டணம் மற்றும் தொலைபேசி கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பணிகளும் ஆன்-லைனில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வசூலான ரூ.5 லட்சத்தை கடையில் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து விட்டு, நேற்று முன்தினம் இரவு பணியாளர்கள் மையத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் பணிக்கு வந்தபோது மையம் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள், பணம் வைக்கப்பட்டு இருந்த டப்பாவை பார்த்தனர். அப்போது ரூ.5 லட்சம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து அவர்கள் உரிமையாளர் ராஜகோபாலுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் இதுகுறித்து நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இணையதள சேவைமையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாலை 3 மணி அளவில் கருப்பு நிறத்தில் துணி ஒன்றை தலையில் மூடிக்கொண்டு கள்ளச்சாவியை பயன்படுத்தி, மர்ம நபர் ஒருவர் இணையதள சேவை மையத்தை திறந்து பணத்தை திருடி செல்வது தெரியவந்தது.
அந்த காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த துணிகர திருட்டு சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.