பாராமதி,
பாராமதி விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமை நடந்த கோர விபத்தில் உயிரிழந்த துணை முதல்-மந்திரி அஜித்பவாரின் உடல், நேற்று முன்தினம் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. நேற்று காலை, அவரது மகன்கள் பார்த் மற்றும் ஜெய் பவார் ஆகியோர் தங்களது தந்தையின் அஸ்தியை சேகரித்தனர்.
பின்னர் துணை முதல்-மந்திரி அஜித்பவாரின் அஸ்தி, நேற்று அவரது சொந்த ஊரான பாராமதி அருகே உள்ள நீரா மற்றும் கர்கா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கரைக்கப்பட்டது. குடும்ப உறுப்பினர்களுடன் சிறிய படகு மூலம் நதி சங்கமத்திற்கு சென்று, மூத்த மகன் பார்த் பவார் அஸ்தியை கரைத்தார்.
அஜித்பவாரின் மறைவு குறித்து அவரது மருமகனும் எம்.எல்.ஏ.வுமான ரோகித் பவார் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “அஜித் தாதா எந்த மண்ணில் வளர்ச்சியை விதைத்தாரோ, அதே மண்ணில் அவரது அஸ்தியை சேகரிப்போம் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. விதியின் விளையாட்டிற்கு முன்னால் யாருடைய விருப்பமும் செல்லுபடியாகாது.
அவரது அஸ்தியை சேகரிக்கும் போது, அவர் திடீரென பீனிக்ஸ் பறவை போல எழுந்து வந்து, “முட்டாள்களே, ஏன் அழுகிறீர்கள்? உங்கள் மனவலிமையை சோதிக்க நான் நடத்திய ஒத்திகை இது, எழுந்து போய் மக்களுக்காக வேலை பாருங்கள்” என்று தனது கம்பீரமான குரலில் சொல்வது போலவே எனக்கு தோன்றியது” என்றார்.