சிம்லா,
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகின்றன.அந்தவகையில் இமாசல பிரதேசத்தில் பொது நிகழ்ச்சிகள், கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு தற்போது நடந்து வரும் கண்காட்சிகள் மற்றும் விழாக்களை உடனடியாக நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் மாநிலம் முழுவதும் முக கவசம் அணியாதவர்களுக்கு எந்தவித சேவையும் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது. முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் தலைமையில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதேநேரம் மாநிலத்தில் பள்ளிகளில் ஆண்டிறுதி தேர்வுகள் நடந்து வரும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக எந்தவித முடிவுகளும் எடுக்கப்படவில்லை. தங்கள் எல்லைக்குள் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் முதல்-மந்திரி நேற்று காணொலி காட்சி மூலம் ஆய்வு நடத்தினார்.