புதுடெல்லி,
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தனது மனைவி, பிரான்ஸ் தொழில் அதிபர்கள் மற்றும் மந்திரிகளுடன் 4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தார். நேற்று இரவு டெல்லி விமான நிலையம் வந்த பிரான்சு அதிபரை பிரதமர் மோடி, மரபுகளை மீறி நேரில் சென்று வரவேற்றார்.
இந்த நிலையில், இன்று காலை 9 மணியளவில், பிரான்சு அதிபர் இம்மானுவேல் மெக்ரானுக்கு ஜனாதிபதி மாளிகையில், சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இம்மானுவேல் மெக்ரான் மற்றும் அவரது மனைவியை வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற வீரர்கள் அணி வகுப்பு மரியாதையை இம்மானுவேல் மெக்ரான் ஏற்றுக்கொண்டார்.
பிரான்சு அதிபர் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் பிரான்சு அதிபர் இம்மானுவேல் மெக்ரானை சந்தித்து பேசுகிறார். இதையடுத்து, உயர்மட்ட அதிகாரிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதன் பின்னர், இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி- இம்மானுவேல் மெக்ரான் ஆகிய இரு தலைவர்களும் விரிவான ஆலோசனை நடத்துகின்றனர். இதையடுத்து, இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களையும் சந்திக்க உள்ளனர். இருநாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் சந்திப்பின் போது பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. பிரான்ஸ் நாட்டின் அதிபராக பதவியேற்ற பின்னர் இம்மானுவல் மெக்ரான் முதல் முறையாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மானுவேல் மெக்ரான் வரும் ஞாயிற்றுக்கிழமை (11ம் தேதி), பிரதமர் மோடியுடன் 121 நாடுகள் பங்கேற்கும் சூரிய ஒளி உற்பத்தி கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார். அதன்பின் 12ம் தேதி (திங்கள்கிழமை) உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சூரிய ஒளி உற்பத்தி ஆலையை தொடங்கி வைக்கிறார் என அவரது பயணத் திட்டம் அமைக்கப்பட்டு உள்ளது.