சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தொழிற்சாலை ஒன்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. கியாஸ்புரா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
லூதியானாவின் மேற்கு துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் ஸ்வாதி திவானா, இந்த சம்பவம் உண்மையில் வாயு கசிவுதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், இது ஒரு வாயு கசிவு வழக்கு. மக்களை வெளியேற்ற தேசிய பேரிடர் மீட்புப் படை குழு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.
மேலும், இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் 11 பேரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வாயுவின் தன்மை பற்றி இன்னும் அறியப்படாததால் மக்கள் தொகை அதிகம் உள்ள இப்பகுதியை காலி செய்வதே உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை என ஸ்வாதி கூறினார்.
இதனைத்தொடர்ந்து, பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் எரிவாயு கசிவு சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளதோடு, இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் எரிவாயு கசிவு சம்பவத்தில் பாதித்தவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என பஞ்சாப் முதல்-மந்திரி அறிவித்துள்ளார்.