மணாலி,
இமாசலில் ரோதங் பகுதியில் மிக உயரமான பகுதியில், மணாலி - லாஹல் ஸ்பிதி பள்ளத்தாக்கை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான அடல் சுரங்கப்பாதையை திறந்துவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது- அடல் சுரங்கப்பாதை இந்தியாவின் எல்லை பாதுகாப்பு உள்கட்டமைப்புக்கு புதிய வலு சேர்க்கும். உலகத்தரம் வாய்ந்த எல்லை இணைப்புக்கு இது ஒரு மிகச்சிறந்த உதாரணம் ஆகும். சுரங்கப்பாதை மூலம் எல்லைப் பாதுகாப்பில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும்.
எல்லைப் பகுதியில் இணைப்பு ஏற்படுத்துவது பாதுகாப்பு விஷயங்களுடன் நேரடி தொடர்புடையது ஆகும். வளர்ச்சியுடன் சாலை இணைப்பு நேரடி தொடர்பு கொண்டதாகும். இந்த நெடுஞ்சாலை சுரங்கப்பாதை மக்களுக்கு மட்டும் பலனளிக்காமல் பாதுகாப்பு படைக்கும் பலன் சேர்க்கும். நாட்டை பாதுகாப்பதை விட வேறு எதுவும் எங்களுக்கு முக்கியமானது இல்லை. நாட்டின் பாதுகாப்பில் சமரசம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் இந்த நாடு கண்டிருக்கிறது.
இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் இந்தப் சுரங்கப்பாதை பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கல்வி அமைச்சகத்திற்கு நான்கோரிக்கை விடுக்கிறேன். இந்த சுரங்கப்பாதை எவ்வாறு கட்டப்பட்டது என்பதை மாணவர்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். இந்த சுரங்கப்பாதைக்கு அடல்ஜி 2002 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். ஆனால், 2013-14-வரை வெறும் 1,300 மீட்டர்கள் வரையே பணி நடைபெற்று இருந்தது.
ஆனால், 2014-க்கு பிறகு இந்த திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் துவக்க காலத்தில் செயல்படுத்தப்பட்டதை போல செயல்படுத்தினால் பயன்பாட்டுக்கு வர 40 ஆண்டுகள் வரை ஆகும் என நிபுணர்கள் கணித்த நிலையில், நாங்கள் வெறும் 6 ஆண்டுகளிலேயே முடித்துள்ளோம் என்றார்.