இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. ஆட்சியமைக்கும் நிலையை நோக்கி அக்கட்சி நகரும் நிலையில் தேர்தலில் முறைகேடு என எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இப்போது தேர்தல் முடிந்ததும், முன்பு இருந்த பாகிஸ்தான் அரசுகளின் கோஷத்தை எழுப்பியுள்ளார் இம்ரான்கான்.
இம்ரான் கான் பேசுகையில், இந்திய மீடியாக்கள் என்னை சித்தரித்து காட்டியவிதம் என்னை மிகவும் கவலையடைய செய்தது. அவர்கள் என்னை ஒரு பாலிவுட் வில்லன் போன்று காட்டினர். இந்தியாவுடன் அமைதியையும், வர்த்தக உறவையையும் விரும்புகிறோம். காஷ்மீர் விவகாரம் துரதிஷ்டவசமானது. இந்தியா காஷ்மீரில் மனித உரிமைகள் மீறலில் ஈடுபடுகிறது. காஷ்மீர் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். என்ன நடந்தாலும் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானைதான் இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.
இந்தியாவுடன் அமைதியான, நல்ல பேச்சுவார்த்தையை விரும்புகிறோம். இந்தியா நடவடிக்கையை எடுத்தால் நாங்களும் நடவடிக்கையை எடுப்போம். துணை கண்டத்தில் இந்தியா பாகிஸ்தான் நல்லுறவு என்பது முக்கியமானது என கூறியுள்ளார்.