திருவனந்தபுரம்,
சென்னையிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடிற்கு பயணிகள் பஸ் இயங்குகிறது. இந்நிலையில் இன்று சென்னையிலிருந்து கோழிக்கோடு நோக்கி 40 பயணிகளுடன் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது கேரளாவில் உள்ள பாலக்காடு மாவட்டத்தின் திருவாழியோடு பகுதியில் செங்குத்தான சாலையில் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி பயணிகள் அலறினர்.
இது குறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.