புதுடெல்லி,
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு நடவடிக்கையால், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சில்லரை வர்த்தக நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இதில், அமேசான், பிளிப்கார்ட், சொமேட்டோ உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஊரடங்கு அமலில் இருந்தபோதிலும், அத்தியாவசிய பொருட்கள் எளிதான முறையிலும், பாதுகாப்பாகவும் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக பியூஸ் கோயல், இந்த கூட்டத்தில் தெரிவித்தார்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் தங்குதடையின்றி நடப்பதற்கும், பல்வேறு வசதிகள் சுமுகமாக கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் அடிப்படையில்தான், மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகள் அத்தியாவசிய பொருட்கள் வினியோகத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்து வருகிறது. மேலும், ஊரடங்கையொட்டி, அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி, அவற்றின் போக்குவரத்து, வினியோகம் ஆகியவற்றை கண்காணிக்க தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை ஒரு கட்டுப்பாட்டு அறையை திறந்துள்ளது.
இதுபோல், தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பு (பெசோ) ஊரடங்கையொட்டி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் இதர சுகாதார சாதனங்களை ஆஸ்பத்திரிகளுக்கு வினியோகிப்பதில், பெட்ரோலியம், வெடிபொருட்கள், ஆக்சிஜன் மற்றும் வாயு தொழிற்சாலைகள் சந்தித்து வரும் பிரச்சினைகளை களைய நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆக்சிஜனை சேமித்து வைப்பதற்கும், எடுத்துச் செல்வதற்குமான உரிமங்களை விரைந்து வழங்குமாறு தனது அலுவலகங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மார்ச் 31-ந் தேதி முடிவடையும் உரிமங்களின் காலஅளவை ஜூன் 30-ந் தேதிவரை நீட்டித்துள்ளது. உரிமம் புதுப்பிப்பு தாமத கட்டணத்தை ரத்து செய்துள்ளது.
ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன், நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவற்றை கொண்டு செல்வதை தடுக்க வேண்டாம் என்று அனைத்து மாநிலங்களின் உள்துறை முதன்மை செயலாளர்களுக்கு பெசோ உத்தரவிட்டுள்ளது. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை மூட வற்புறுத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளது.