கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலத்தின் புறநகர்ப் பகுதியில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் இரண்டு செவிலியர்களுக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது சமீபத்தில் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களும் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். அதாவது, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 196 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.
வௌவால், பன்றி உள்ளிட்டவைகளால்தான் நிபா தொற்று மனிதர்களுக்கு பரவுகிறது. இந்தத் தொற்றால், காய்ச்சல், தலைவலி, மூளை வீக்கம், சுவாசப் பிரச்னைகள் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்தியாவில் நிபா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பயணக்கட்டுப்பாடுகளோ, வர்த்தகக் கட்டுப்பாடுகளோ ஏதும் விதிக்கத் தேவையில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.