தேசிய செய்திகள்

கூட்ட நெரிசலால் தகராறு; ஓடும் ரெயிலில் இருந்து வாலிபரை கீழே தள்ளி படுகொலை செய்த பயணி கைது

வாசற்படியில் அமர்ந்திருந்த வினோத் காம்ப்ளேவை ஓடும் ரெயிலில் இருந்து மங்கேஷ் தாசோர் கீழே தள்ளிவிட்டார்.

தினத்தந்தி

மும்பை,

புனேயை சேர்ந்தவர் வினோத் காம்ப்ளே. இவர் தனது நண்பர் கணேஷ் தேவ்கர்(வயது25) என்பவருடன் நேற்று அதிகாலை புனே ரெயில் நிலையத்துக்கு சென்றார். பின்னர் இருவரும் அங்கு வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பொதுப்பெட்டியில் ஏறினர். ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் 2 பேரும் வாசற்படியில் அமர்ந்த படி பயணம் செய்தனர். அந்த பெட்டியில் பயணம் செய்த அகோலாவை சேர்ந்த மங்கேஷ் தாசோர்(40) என்பவர் கூட்டம் அதிகமாக இருப்பதால் வினோத் காம்ப்ளேவை எழுந்து நிற்குமாறு கூறியுள்ளார்.

இதற்கு அவர் மறுத்ததால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியதில் கடும் ஆத்திரமடைந்த மங்கேஷ் தாசோர் திடீரென வாசற்படியில் அமர்ந்திருந்த வினோத் காம்ப்ளேவை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இதில், தண்டவாளத்தில் விழுந்த வினோத் காம்ப்ளே படுகாயமடைந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் தப்பிஓட முயன்ற மங்கேஷ் தாசோரை மடக்கி பிடித்து தானே ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.

இதுபற்றி தானே ரெயில்வே போலீசார் கர்ஜத் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் கர்ஜத் ரெயில்வே போலீசார் தண்டவாளம் அருகே படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வினோத் காம்ப்ளேவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் கூறினர். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மங்கேஷ் தாசோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து