தேசிய செய்திகள்

டெல்லி வன்முறைக்கு எதிராக ஜந்தர் மந்தரில் அமைதிப்பேரணி

டெல்லி வன்முறைக்கு எதிராக ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

புதுடெல்லி,

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சமீபத்தில் வன்முறை வெடித்ததால், ஜாப்ராபாத், மவுஜ்பூர், கோகுல்புரி, பஜன்புரா, சந்த்பாக், பாபர்பூர், யமுனா விகார் போன்ற டெல்லியின் வடகிழக்கு பகுதிகள் அனைத்தும் போர்க்களமாக மாறின. கடந்த 25-ந்தேதி முதல் இந்த பகுதிகளில் நடந்த வன்முறை சம்பவங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கின.

பயங்கர ஆயுதங்களால் தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும், கற்களை வீசியும் தாக்கியதில் பலர் மாண்டனர். வீடுகள், வழிபாட்டு தலங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் தீ வைப்பு, வாகனங்கள் எரிப்பு, வர்த்தக நிறுவனங்கள் சூறையாடல் என 3 நாட்களாக வன்முறையாளர்கள் நடத்திய வெறியாட்டம் மக்களை பதைபதைக்க வைத்தது.

டெல்லியில் சுமார் 30 ஆண்டுகளுக்குப்பின் நடந்திருக்கும் மிகப்பெரிய இந்த வன்முறை சம்பவங்களில் நேற்று முன்தினம் வரை 38 பேர் பலியாகி இருந்தனர். இதில் படுகாயமடைந்தவர்களில் மேலும் 4 பேர் நேற்று ஆஸ்பத்திரிகளில் உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்து விட்டது. இன்னும் 200-க்கும் மேற்பட்டோர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது, டெல்லியில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. எனினும், முக்கியமான இடங்களில் துணை ராணுவப்படையினரும், காவல்துறையினரும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, டெல்லி வன்முறையைக் கண்டித்து, ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் பாரத் மாதா கி ஜெய் , ஜெய் ஸ்ரீ ராம் என கோஷங்கள் எழுப்பினர். தேசியக்கொடியையும் கையில் ஏந்திய படி நூற்றுக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். டெல்லி அமைதி மன்றம் (Delhi Peace Forum) சார்பில் நடத்தப்பட்ட இந்தப் பேரணியில் பாஜக தலைவர் கபில் மிஸ்ராவும் கலந்து கொண்டார்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு