பெங்களூரு,
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றச்சாட்டு கூறியதால், அவருக்கும், டி.ஜி.பி. சத்திய நாராயணராவுக்கும் இடையே மோதல் உருவானது. இந்த விவகாரத்தில் சிறைத்துறையில் இருந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளான சத்திய நாராயணராவ், ரூபா ஆகியோரை கர்நாடக அரசு நேற்று அதிரடியாக பணி இடமாற்றம் செய்துள்ளது.
ரூபா இடமாற்றம் செய்யப்பட்டதற்கு கர்நாடக மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் விமர்சனம் செய்து உள்ளனர். முன்னாள் அதிகாரிகளும் ரூபாவிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இடமாற்றம் தொடர்பாக நேற்று ரூபாவிடம் கேள்வி எழுப்புகையில், நோட்டீஸ் தொடர்பாக எந்தஒரு ஆவணமும் எனது கைக்கு வரவில்லை, எனக்கு நோட்டீஸ் கிடைக்க பெற்றதும் பதிலளிப்பேன், என கூறிவிட்டார்.
சிறையில் அவருக்கு சமையல் அறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு இருந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா சிறைக்கு சென்று அவருடைய அறையை ஆய்வு செய்து கையடக்க வீடியோ கேமராவில் படம் பிடித்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சசிகலா, ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.