புதுடெல்லி,
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் 3 நிறுவனங்கள் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி ம்ருத்துவ பரிசோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் தடுப்பூசி பொது பயன்பாட்டுக்கு விடப்படும் எனக்கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - அஸ்ட்ரா ஜெனெகா கண்டுபிடித்துள்ள கோவிஷீல்ட்' தடுப்பூசி, 73 நாட்களில் வணிகமயமாக்கப்படும் என அந்த மருந்தை இந்தியாவில் பரிசோதித்து வரும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் கூறியதாக பிரபல ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது.
ஆனால், இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம், 73 நாட்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்ற தகவல் முற்றிலும் தவறானது என தெரிவித்துள்ளது. இது குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் கூறுகையில், இந்திய அரசு தடுப்பூசி உற்பத்திக்கும் வரும் கால தேவைகளுக்காக கையிருப்பு வைத்துக்கொள்ளவும் மட்டுமே அனுமதி வழங்கியிருக்கிறது. ''
பரிசோதனை வெற்றிகரமாக முடிந்த பிறகு உரிய அனுமதிகள் பெற்ற பிறகே கோவிஷீல்ட் மருந்து வணிகமயமாக்கப்படும். தடுப்பூசி நோய் எதிர்ப்பு மற்றும் செயல்திறன் மிக்கதாக உள்ளது என நிரூபிக்கப்பட்ட பிறகே அதிகாரப்பூர்வமாக மருந்து கிடைப்பது பற்றி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.