புதுடெல்லி,
பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது. பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் இந்திய அமைதிக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்து வருகின்றன. இதில் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற இயக்கங்கள் முக்கியமானவையாக விளங்குகின்றன.
இந்த நிலையில் 2018-ம் ஆண்டுக்கான நாடுகளின் பயங்கரவாதம் தொடர்பான அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இதில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அமெரிக்கா அடுக்கியுள்ளது. இது தொடர்பாக அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிராந்திய அளவிலான பயங்கரவாத குழுக்கள் 2018-ம் ஆண்டிலும் மிகுந்த அச்சுறுத்தலாக விளங்கின. எடுத்துக்காட்டாக, பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கி வரும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகள் தங்கள் திறனை வளர்த்துக்கொண்டதுடன், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இலக்குகளை தாக்கும் நோக்கத்தையும் கொண்டிருந்தன.
அந்தவகையில் கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீரின் சஞ்சுவான் ராணுவ முகாமில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் கொல்லப்பட்டனர். லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அமைப்புகள் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாகவே விளங்குகின்றன.
இந்த அமைப்புகளின் நிதி சேகரிப்பு, ஆட்சேர்ப்பு, பயிற்சி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பாகிஸ்தான் தவறிவிட்டது. மாறாக அந்த அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதித்தது.
ஒருபுறம் ஆப்கானிஸ்தான் அரசுக்கும், ஆப்கன் தலீபான்களுக்கும் இடையேயான அரசியல் நல்லிணக்கத்துக்கு பாகிஸ்தான் குரல் கொடுத்து வந்தாலும், தங்கள் நாட்டில் இயங்கி வரும் ஆப்கன் தலீபான் மற்றும் ஹக்கானி குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறி விட்டது. இதனால் இந்த பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும், அமெரிக்க படைகளுக்கும் எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் இயற்றி, பயங்கரவாதத்துக்கு நிதி சேர்க்கும் நடவடிக்கையை குற்றம் என அறிவித்துள்ள பாகிஸ்தான், அதை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மீதும், தனிநபர்கள் மீதும் ஒரே மாதிரியான பொருளாதார தடைகளை பாகிஸ்தான் செயல்படுத்தவில்லை. இவ்வாறு அமெரிக்கா தனது அறிக்கையில் கூறியுள்ளது.