தேசிய செய்திகள்

குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி: விவசாயிகள்-காவல்துறை இடையே பேச்சுவார்த்தை

டெல்லியில் குடியரசு தினத்தில் நடத்த திட்டமிட்ட டிராக்டர் பேரணி பற்றி முடிவு செய்ய விவசாயிகள் மற்றும் காவல் துறை மூத்த அதிகாரிகள் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் வாட்டும் குளிருக்கு மத்தியிலும் விவசாயிகள் நடத்தும் போராட்டம் நேற்று 56-வது நாளை எட்டியது. வருகிற 26-ந்தேதி நாட்டின் குடியரசு தினவிழா, தலைநகரில் நடைபெற இருப்பதால் அதற்குள் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது.

ஆனால், குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதாக விவசாய அமைப்புகள் அறிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

போராடும் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு 9 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தி விட்டது. ஆனாலும் அவற்றில் ஆக்கப்பூர்வமான முடிவு எட்டப்படவில்லை.

3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றே ஆக வேண்டும் என்பதில் விவசாய அமைப்புகள் பிடிவாதம் காட்டுகின்றன. அதே போன்று, அவற்றை திரும்பப்பெற முடியாது என மத்திய அரசும் உறுதியாக உள்ளது. எனவே விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் முட்டுக்கட்டை நீடிக்கிறது.

இந்த நிலையில், 10-வது சுற்று பேச்சுவார்த்தை டெல்லி விஞ்ஞான பவனில் நேற்று மதியம் 2.45 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. மத்திய அரசின் சார்பில், விவசாய மந்திரி நரேந்திரசிங் தோமர், உணவு மந்திரி பியூஷ் கோயல், வர்த்தக ராஜாங்க மந்திரி சோம் பர்காஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். விவசாயிகள் தரப்பில் 40 அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

முதல் 2 அமர்வுகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், தொடர்ந்து பேச்சுவார்த்தை நீடித்தபோது, வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டு காலத்துக்கு நிறுத்தி வைக்கலாம், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகளைக்கொண்ட ஒரு கூட்டுக்குழுவை அமைத்து பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என மத்திய மந்திரிகள் யோசனை தெரிவித்தனர்.

இது தொடர்பாக தங்களுக்குள் ஆலோசிக்க வேண்டியது இருக்கிறது என்று விவசாய அமைப்புகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு வசதியாக 22-ந் தேதி (நாளை) அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

குடியரசு தினத்தில் தங்களது எதிர்ப்புகளை தெரியப்படுத்த, விவசாய அமைப்புகளால் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதுபற்றி டெல்லி காவல்துறையே முடிவு செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து இருந்தது.

இதன்படி, விவசாயிகளை சந்தித்து பேசுவதற்காக சிங்கு எல்லையருகே அமைந்த மந்திரம் ரிசார்ட்டிற்கு டெல்லி காவல் துறையின் இணை ஆணையர் எஸ்.எஸ். யாதவ் வருகை தந்துள்ளார். இந்த சந்திப்பில், குடியரசு தினத்தில் நடைபெற திட்டமிடப்பட்ட டிராக்டர் பேரணி பற்றி ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

மத்திய அரசு வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க முன்வந்துள்ள சூழலில் இன்றைய பேச்சுவார்த்தையில் டிராக்டர் பேரணியை கைவிடுவது பற்றி காவல் துறை மூத்த அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இடையேயான சந்திப்பில் பேசப்படும் என்றும் அதில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை