புதுடெல்லி,
மேற்கு வங்காளத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 9 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. மே 2-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது. அதில், திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியானவுடன், மாநிலம் முழுவதும் ஆங்காங்கே வன்முறை வெடித்தது. பா.ஜனதா ஆதரவாளர்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாக அக்கட்சி குற்றம் சாட்டியது. இந்த வன்முறை சம்பவங்களில் கொலை, கற்பழிப்பு ஆகியவையும் அடங்கும். சொத்துகள் சூறையாடப்பட்டன.
இந்த வன்முறை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, கொல்கத்தா ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கொலை, கற்பழிப்பு போன்ற கொடிய குற்றங்கள் குறித்து ஐகோர்ட்டு கண்காணிப்புடன் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதர வன்முறை சம்பவங்கள் பற்றி சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்தநிலையில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக சி.பி.ஐ. 9 வழக்குகளை பதிவு செய்திருப்பதாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த குற்றங்களை விசாரிக்கும் சி.பி.ஐ.யின் 4 சிறப்பு குழுக்களும் கொல்கத்தாவில் இருந்து குற்றங்கள் நடந்த பகுதிகளுக்கு சென்றுள்ளன. மாநில அரசு மேலும் சில குற்றங்களின் விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க உள்ளது. அதனால், இன்னும் சில வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.