உப்பள்ளி;
பிரபல ரவுடி
பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர் பச்சா கான் (வயது 55). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இர்பான் கான் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பச்சா கான் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர், பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் ஒரு வழக்கின் விசாரணைக்காக போலீஸ் பாதுகாப்புடன் பச்சா கான் தார்வாருக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர், விசாரணை முடிந்தவுடன் பல்லாரிக்கு செல்ல இருந்த நிலையில், பச்சா கான் தனது காதலியை சந்திக்க அனுமதிக்குமாறு போலீசாரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு போலீசாரும் அனுமதி அளித்துள்ளனர். இந்த நிலையில் பச்சா கான், தனது காதலியுடன் தார்வார் புறநகரில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் தங்கி இருந்தார். அங்கு அவர் காதலியுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. போலீசார் வெளியே வேனில் பச்சா கானுக்காக காத்திருந்தனர்.
3 போலீசார் கைது
இதுபற்றி உப்பள்ளி-தார்வார் மாநகர போலீஸ் கமிஷனர் லாபுராமுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கோகுல்ரோடு போலீசார், ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த ஓட்டலில் ஆயுள் தண்டனை கைதி பச்சா கான், தனது காதலியுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த பல்லாரி மாவட்ட போலீசார் 3 பேரையும் கோகுல்ரோடு போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர்கள் 5 பேரும் பல்லாரி மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆயுள் தண்டனை கைதியை காதலியை சந்திக்க வசதி செய்து கொடுத்த 3 போலீசார் மீதும் துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.