செய்திகள்

கடையம் அருகே வனத்துறையினர் விசாரணைக்கு சென்ற விவசாயி திடீர் சாவு போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

கடையம் அருகே வனத்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவசாயி திடீரென இறந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

கடையம்,

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 72), விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே உள்ள வயலில் கடலை மற்றும் கத்தரி பயிர் செய்துள்ளார். அங்கு அவர் மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வனத்துறையினர் 5 பேர் ஜீப்பில் நேற்று முன்தினம் இரவு அணைக்கரை முத்து வீட்டுக்கு வந்தனர். அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதனை அறிந்ததும் அவரது மகன் நடராஜன் மற்றும் உறவினரும் சேர்ந்து சிவசைலத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

சிவசைலம் ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது எதிரே வனத்துறை அலுவலர்கள் ஜீப்பில் அணைக்கரை முத்துவை அழைத்து வந்தனர். அவரிடம் மகன் நடராஜன் விசாரித்தபோது உடல்நிலை சரியில்லை என்று கூறினாராம்.

இதையடுத்து அவரை கடையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினார். அங்கு டாக்டர் பரிசோதித்தபோது, அணைக்கரை முத்து இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீயாக பரவியது.

உடனே அணைக்கரை முத்துவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை திரண்டு சென்று கடையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் அரசியல் கட்சி பிரமுகர்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தை அறிந்து பூங்கோதை எம்.எல்.ஏ., தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் ஆகியோரும் வந்தனர்.

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கோகுலகிருஷ்ணன், இளங்கோவன், பாலாஜி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ரகுராஜன், ஆடிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இச்சம்பவம் குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசில் நடராஜன் புகார் செய்தார். அதன்பேரில் வனத்துறையினர் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அணைக்கரை முத்து உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது பிரேத பரிசோதனை அறை முன்பு உறவினர்கள் திரண்டனர். மேலும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன், மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ்மள்ளர், மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜசோழன் உள்ளிட்ட நிர்வாகிகளும் திரண்டனர்.

மாலை 3 மணி அளவில் அம்பை மாஜிஸ்திரேட்டு கார்த்திகேயன் அங்கு வந்தார். அவர், அணைக்கரை முத்துவின் மனைவி பாலம்மாள், மகன் நடராஜன், மகள்கள் வசந்தி, மாரியம்மாள், மருமகன் ஆறுமுகம் ஆகிய 5 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார். அவர்களுடைய வாக்குமூலங்களை பதிவு செய்தார்.

தொடர்ந்து உறவினர்களும், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும். விவசாயியை இழந்த குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறினர்.

நேற்று மாஜிஸ்திரேட்டு விசாரணை நடந்ததால், அணைக்கரை முத்து உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை