சிறு வயது முதலே இயற்கை மீது நேசம் கொண்டவராக இருந்திருக்கிறார். வீட்டில் தனது தந்தை சிட்டுக்குருவி வளர்த்து வந்ததால் பறவை இனங்கள் மீது இயல்பாகவே நேசம் உண்டாகி இருக்கிறது. பணி நிமித்தமாக நகர்புறத்தில் குடியேறியவர் நகர் பகுதியில் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கத்தில் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார்.
இவரது வீட்டில் சிட்டுக்குருவிகள் தங்கி செல்வதற்கு ஏதுவான கட்டமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. கண்ணாடி குடுவைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், மரக்கூண்டு கள் என பறவைகளின் தங்குமிடங்கள் அழகுற வடி வமைக்கப்பட்டுள்ளன. வீட்டின் வெளிப்புறத்தில் வளர்க்கப்படும் மரங்களும், செடிகளும் சிட்டுக்குருவிகளுக்கு புகலிடம் அளிக்கின்றன. அங்கு அமர்ந்து ஓய்வெடுத்து செல்கின்றன.
சிறு தானியங்கள், தினை வகைகள், அரிசி, ரொட்டி போன்ற உணவு பதார்த்தங்களை சிட்டுக்குருவிகளுக்கு வழங்குகிறார். அவற்றை ஆசுவாசமாக உட்கொண்டு செல்வதை சிட்டுக்குருவிகள் வாடிக்கையாக கொண்டுள்ளன. அவை தண்ணீர் பருகுவதற்கு சிறு தொட்டி களையும் நிறுவி இருக்கிறார். அதில் தற்போது நிலவும் கோடை வெயிலுக்கு இதமாக குளியல் போட்டும் சிட்டுக்குருவிகள் ஆனந்தம் அடைகின்றன. சிட்டுக்குருவிகள் அமர்ந்து ஓய்வெடுப்பதற்கு மரப்பலகைகளையும் நிறுவி இருக்கிறார்.
72 வயதாகும் எட்வின் ஜோசப், சிட்டுக்குருவி களுக்கு தேவையான கட்டமைப்புகளை தானே நிறுவி இருக்கிறார். காலையில் எழுந்ததும் அவைகளுக்கு உணவு நிரப்பி வைத்து விடுகிறார். சிட்டுக்குருவி களின் கீச் குரல்தான் தன்னை அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுப்பி விடுவதாக சொல்கிறார். இவரை அந்த பகுதி மக்கள் சிட்டுக்குருவி மனிதர் என்றே அழைக்கிறார்கள்.
தனது பகுதியில் நிறுவப்பட்ட தனியார் மொபைல் போன் டவரை அகற்றுவதற்காக பல மாதங்கள் போராடினார். பிறகு உள்ளூர் அதிகாரிகளின் துணையுடன் அதனை அகற்றியும் விட்டார். சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருக்கிறது. இது தொடர்பாக மாணவர்கள், இளைஞர்களிடம் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.