இங்கிலாந்தில் ஆண்டுதோறும் 3 லட்சம் டன் எலெக்ட்ரானிக் கழிவுகள் குப்பையில் வீசப்படுகின்றன. அவ்வாறு வீசப்படும் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இந்தக் கழிவுகளில் இருந்து தங்கத்தை மீட்டு நாணயமாகவும், தங்கக் கட்டிகளாகவும் மாற்றும் பணியை ராயல் மின்ட் நிறுவனம் தொடங்கியிருக்கிறது. இதற்காக தெற்கு வேல்ஸ் பகுதியில் புதிய தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழிற்சாலை அடுத்த ஆண்டு முதல் லேப்டாப் மற்றும் செல்போன்களின் சர்க்யூட் போர்டுகளில் இருந்து விலை மதிப்புள்ள உலோகங்களைப் பிரித்தெடுக்கும் பணியைத் தொடங்கும் என்று ராயல் மின்ட் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து ராயல் மின்ட் நிறுவனத்தின் சீன் மில்லர்டு கூறுகையில், இங்கிலாந்தில் வாரந்தோறும் 90 டன் சர்க்யூட் போர்டு கழிவுகள் சேரும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவற்றில் இருந்து பிரித்தெடுக்கப்படும் தங்கத்தை நாணயங்கள், தங்கக்கட்டிகள் மற்றும் மற்ற தயாரிப்புகளுக்கு பயன்படுத்துவோம். தற்போது இங்கிலாந்தில் கழிவுகளாகச் சேரும் 99 சதவிகித சர்க்யூட் போர்டுகளை உயர் வெப்ப நிலையில் உருக்குவதற்காக கடல் கடந்து அனுப்பி வருகிறோம். எலெக்ட்ரானிக்ஸ் கழிவுகள் ஆண்டுதோறும் அதிகரித்தால், பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும் என்றார்.