புதுடெல்லி
நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் (2018 ஏப்ரல்-2019 ஜனவரி) 12 பெரிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 3.11 சதவீதம் அதிகரித்து 58 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
முக்கிய துறைமுகங்கள்
இந்தியாவின் நீண்ட கடற்கரையில் 12 பெரிய துறைமுகங்களும், 187 சிறிய மற்றும் நடுத்தர துறைமுகங்களும் உள்ளன. இதில் கண்ட்லா, மும்பை, ஜே.என்.பி.டி., மர்ம கோவா, புதிய மங்களூரு, கொச்சி, சென்னை, எண்ணூர், தூத்துக்குடி, விசாகப்பட்டினம், பரதீப், கொல்கத்தா (ஹால்டியா உள்பட) ஆகிய 12 முக்கிய துறைமுகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற சிறிய மற்றும் நடுத்தர துறைமுகங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
கடந்த நிதி ஆண்டில் (2017-18) 12 பெரிய துறைமுகங்கள் 67.94 கோடி டன் சரக்குகளை கையாண்டன. முந்தைய நிதி ஆண்டில் அது 64.84 கோடி டன்னாக இருந்தது. ஆக, துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 4.77 சதவீதம் உயர்ந்து இருந்தது. நிலக்கரி, உரம், பெட்ரோலிய பொருள்கள் மற்றும் கண்டெய்னர்கள் அதிக அளவில் கையாளப்பட்டதே அதன் பின்னணியாக இருந்தது.
நடப்பு நிதி ஆண்டில், ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்த முதல் 10 மாதங்களில் 12 பெரிய துறைமுகங்கள் மொத்தம் 58 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளன. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 56 கோடி டன்னாக இருந்தது. ஆக, பெரிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 3.11 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.
கணக்கீட்டுக் காலத்தில் காமராஜர் துறைமுகம் கையாண்ட சரக்கு அதிகபட்சமாக 15.56 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்து கொல்கத்தா மற்றும் ஹால்டியா துறைமுகத்தில் 9.86 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கொச்சி (8 சதவீதம்), ஜே.என்.பி.டி (7.46 சதவீதம்) மற்றும் பரதீப் (6.4 சதவீதம்) ஆகிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கும் அதிகரித்து இருக்கிறது.
கன்டெய்னர்கள்
முதல் 10 மாதங்களில் காமராஜர் துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவு அதிகரித்ததற்கு கன்டெய்னர் சரக்கு களே காரணம் என தெரிய வந்துள்ளது. அதாவது இத்துறைமுகம் கையாண்ட கன்டெய்னர்கள் அதிகபட்சமாக 21.7 சதவீதம் உயர்ந்துள்ளது. கையாண்ட மற்ற திரவ சரக்குகள் 11.63 சதவீதமும், கையாண்ட நிலக்கரி 5.18 சதவீதமும் அதிகரித்து இருக்கிறது. பெட்ரோலிய பொருள் கள் கையாண்ட அளவு 9.14 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.