சென்னை,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் கோபிநாத் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், போலீஸ் அனுமதியின்றி திருப்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி முதல் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த போராட்டத்தை தடுக்க தமிழக டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் நேற்று முன்தினம் விசாரித்தனர். பின்னர், விரும்பிய இடங்களில், போலீஸ் அனுமதியின்றி, பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்த யாருக்கும் உரிமை இல்லை. அனுமதியின்றி போராட்டங்கள் நடந்தால், அதை தடுக்க போலீசாருக்கு தடை எதுவும் இல்லை. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவோ, ஆதரவாகவோ அனுமதியின்றி போராட்டங்கள் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து சில அமைப்புகளை சேர்ந்த வக்கீல்கள், நீதிபதிகள் முன்பு ஆஜராகி, அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருபவர்களின் கருத்தை கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவினால், அமைதியாக முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை போலீசார் தொந்தரவு செய்வதாக கூறினர். இதையடுத்து, இந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதாக நீதிபதிகள் கூறினர். இதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வக்கீல் வைகை, வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் உள்ளிட்ட வக்கீல்கள் ஆஜராகி, மனுதாரர் தன்னை பற்றிய பல விவரங்களை மறைத்து, இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
எனவே, இந்த பொதுநல வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. மேலும், இந்த ஐகோர்ட்டு உத்தரவை சுட்டிக்காட்டி அமைதியான வழிகளில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீசார் மிரட்டுகின்றனர். அதேநேரம், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவோருக்குத்தான் போலீசார் நெருக்கடி கொடுக்கின்றனர். ஆதரவாக போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை என்று வாதிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், எங்களது உத்தரவை முழுமையாக படித்து பார்த்தீர்களா? குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவில்லை. திருப்பூரில் நடைபெறும் போராட்டம் தொடர்பாகத்தான் உத்தரவிட்டோம் என்று கூறினர்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரர் பற்றிய விவரங்களை இந்த ஐகோர்ட்டுக்கு தெரிவிக்காதது துரதிருஷ்டவசமானது என்றும், இதனால் இந்த வழக்கை பொதுநல வழக்காக கருதக்கூடாது. அதன் மீது பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வக்கீல்கள் வாதிட்டனர். அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு பிளடர் வி.ஜெயபிரகாஷ் நாராயணன், இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்தாலும், சட்டவிரோதமாக, உரிய அனுமதி பெறாமல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக போராட்டங்களை நடத்துவோர் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தடை எதுவும் இல்லை என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களின் அடிப்படையில், திருப்பூரில் நடக்கும் போராட்டம் குறித்து கடந்த 5-ந் தேதி (நேற்று முன்தினம்) நாங்கள் பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைக்கிறோம். மேலும், போராட்டக்காரர்கள் தாங்கள் விரும்பும் இடத்தில், அனுமதியின்றி, பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்த முடியுமா? என்ற கேள்வியும் இந்த வழக்கில் எழுகிறது.
இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டியது உள்ளது. எனவே, இந்த வழக்கை வருகிற 11-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். மேலும், அனுமதியின்றி, சட்டவிரோதமாக போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தடை எதுவும் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.