காரைக்கால்,
காரைக்கால் திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் கடந்த 27-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழாவின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சனிபகவானை தரிசிக்க, ஆன்லைன் முன்பதிவு அவசியம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பக்தர்கள், ஆன்லைன் முன்பதிவை காட்டி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் ஒரு கும்பல் பக்தர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி கொண்டு மோசடியாக ஆன்லைன் முன்பதிவு சான்றிதழை கொடுத்து கோவிலுக்குள் அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், திருநள்ளாறை சேர்ந்த ராஜ்குமார் (வயது 35), சங்கர் (40), சுரேஷ் (36) என்பது தெரியவந்தது.