கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை உளுந்து கிலோவுக்கு அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக எழுந்த புகாரின்பேரில் நேற்று முன்தினம் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று அந்த அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் அரசு மானியம் தவிர கிலோவுக்கு 40 ரூபாய் கூடுதலாக வசூலித்துள்ளனர். அவ்வாறு 10,468 கிலோ விதை உளுந்தை விற்றதன் மூலம் கிடைக்கப்பெற்ற தொகையில் கணக்கில் வராத ரூ.4 லட்சத்து 26 ஆயிரத்து 280 சிக்கியது.
4 பேர் மீது வழக்கு
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாகவேளாண் உதவி இயக்குனர் சுப்பிரமணியன், கிடங்கு மேலாளர் செந்தில்நாதன், கிடங்கு துணை மேலாளர் ஜீவிதா, உதவி வேளாண் அலுவலர் பிரகாஷ் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதர், இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.