சென்னை,
சபரிமலை துவாரபாலகர் சிலைக்கு முலாம் பூச வழங்கப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
துவாரபாலகர் சிலைக்காக வழங்கப்பட்ட தங்கம் சட்டவிரோதமாக மாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டதாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் ஒரு பகுதியாக, சிலைக்காக பயன்படுத்தப்பட வேண்டிய தங்கம் சென்னை கொண்டு வரப்பட்டபோது, அந்த தங்கம் நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் என்பவருடன் நடிகர் ஜெயராமுக்கு என்ன தொடர்பு உள்ளது என்பதையும், தங்கம் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டதற்கான பின்னணி என்ன என்பதையும் அறிய எஸ்ஐடி தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கு முன்னர் ஜெயராம் இந்த விவகாரத்தில் நேரடி தொடர்பு இல்லை என விளக்கம் அளித்திருந்தாலும், விசாரணையின் தொடர்ச்சியாக அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்த எஸ்ஐடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு தொடர்பான விசாரணை தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் மேலும் பரபரப்பான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.