நயினார்கோவில்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனில் தான் அதிகமாக மழை பெய்யும். அது போல் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையே பெய்யாததால் பெரும்பாலான கண்மாய் மற்றும் நீர் நிலைகள் தண்ணீரின்றி வறண்டு போய் காட்சியளித்து வருகின்றன. இதேபோல் நயினார்கோவில் அருகே உள்ள தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திலும் தண்ணீர் இல்லாததால் பறவைகள் வராமல் வெறிச்சோடியே காணப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தண்ணீர் உள்ள கண்மாய் மற்றும் நீர் நிலை மற்றும் வயல்களை தேடி பறவைகள் அலைந்து வருகின்றன. இதனிடையே நயினார்கோவில் அருகே பாண்டியூர் பகுதியில் உள்ள வயல் பகுதிகளை சுற்றி இரை தேடுவதற்காக கருப்பு மற்றும் வெள்ளை அரிவாள் மூக்கன் பறவைகள் குவிந்துள்ளன. அரிவாள் மூக்கன் பறவைகளோடு நத்தை கொத்தி நாரை, மஞ்சள் மூக்கு நாரை, நீர் காகம், கொக்குகளும் குவிந்துள்ளன. கடந்த ஆண்டுதேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் அதிகமான பறவைகள் வந்த நிலையில் இந்த ஆண்டு தண்ணீர் இல்லாததால் பறவைகள் இல்லாமல் வறண்டு காணப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.