சென்னை,
மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) 10-வது வகுப்பு தேர்வை கடந்த மார்ச் 5-ந் தேதி முதல் ஏப்ரல் 4-ந் தேதி வரை நடத்தியது. இத்தேர்வை நாடு முழுவதும் 16 லட்சத்து 24 ஆயிரத்து 682 மாணவ-மாணவிகள் எழுதினர்.
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் www.results.nic.in , www.cbs-e-r-esults.nic.in , www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் நேற்று வெளியிடப்பட்டது.
சி.பி.எஸ்.இ. 10-வது வகுப்பு தேர்வில் டெல்லி அருகேயுள்ள குர்கான் பள்ளி மாணவர் பிரகார் மிட்டல் 500-க்கு 499 மதிப்பெண் எடுத்து முதல் இடம் பெற்றுள்ளார். 499 மதிப்பெண் எடுத்து உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் ஆர்.பி. பப்ளிக் பள்ளியை சேர்ந்த மாணவர் ரிம்ஷிம் அகர்வால் 2-வது இடத்தை பிடித்தார். 499 மதிப்பெண் பெற்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாமிலி சர்வதேசபள்ளி மாணவி நந்தினி கார்க் 3-வது இடத்தில் உள்ளார். 499 மதிப்பெண் எடுத்து 4-வது இடத்தை கேரளா மாநிலம் கொச்சி பவான்ஸ் வித்யாலயா பள்ளி மாணவி ஸ்ரீலட்சுமி பெற்றார்.
முதல் இடம் பெற்றவர் முதல் 4-வது இடம் பெற்றவர் வரை 500-க்கு 499 மதிப்பெண் எடுத்துள்ளனர். இதில் சீனியாரிட்டி என்ற அடிப்படையில் அவர்களுக்கு தரவரிசை கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்திய அளவில் மொத்தம் 14 லட்சத்து 8 ஆயிரத்து 594 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 86.70 சதவீத தேர்ச்சி ஆகும்.
திருவனந்தபுரம் மண்டலம் 99.60 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், கோவா, அந்தமான்-நிகோபார் தீவுகள், டையூ -டாமன் ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மண்டலம் 97.37 சதவீதம் பெற்று 2-வது இடத்தை பிடித்தது. அஜ்மீர் மண்டலம் 91.86 சதவீதம் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.