சென்னை,
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி உள்ளது.
இங்கு சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள் உள்பட 188 புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன. மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலையும் இந்த மணி மண்டபத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது. சிவாஜி மணிமண்டபத்தை அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
சிவாஜி கணேசன் மகனும் நடிகருமான பிரபு, மணிமண்டபத்தை முதல்-அமைச்சர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். விழாவில் முதல்-அமைச்சர் பழனிச்சாமி பங்கேற்க வேண்டும் என நடிகர் சங்கம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் வரிசையிலும் குரல் எழுப்பட்டது.
இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைக்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அக்டோபர் 1-ம் தேதி நடைபெறும் விழாவில் பங்கேற்று சிவாஜி மணிமண்டபத்தை ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைக்கிறார். சிவாஜி மணிமண்டபத்தை பன்னீர்செல்வம் திறந்து வைப்பார், ஜெயக்குமார் தலைமையில் நடக்கும் விழாவில் கடம்பூர் ராஜூ முன்னிலை வகிப்பார் என முதல்-அமைச்சர் பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளின்படி வெளியூரில் இருப்பதால் சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்க முடியாத நிலை என முதல்-அமைச்சர் பழனிச்சாமி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைப்பது வரவேற்கத்தக்கது என நடிகர் பிரபு கூறிஉள்ளார்.